அப்போது பிற்பகல் மூன்று மணி
இருக்கும் , அக்கா வீட்டீல் ஒரு சிறிய ”விருந்தை” முடித்துவிட்டு வள்ளியூர் செல்வதற்காக,
திருநெல்வேலி புதிய பேரூந்து நிலையத்திற்கு வந்து இறங்கினேன்.
வள்ளியூர் செல்லும் அடுத்த பேருந்து
புறப்பட இன்னும் அரை மணி நேரம் இருந்தது. அந்த அரை மணி நேரத்தை செலவு செய்வதற்காக , பக்கத்தில் இருந்த சாந்தி டீ ஷ்டால்
& பேக்கரி ( திருநெல்வெலி யில் 90% பேக்கரிகளின்
பெயர் சாந்தி தான் ) மீது பார்வையை செலுத்தினேன் . ”அண்ணா ஒரு
டீ “ என்று சொல்ல எத்தனிக்கும் போது , என் அருகில் ஒரு சிறுமி , சுமார் ஒரு எட்டு வயது இருக்கும் , அவளது ஆடை கொஞ்சம் கந்தலாகவும்
, நிறைய அழுக்காகவும் இருந்தது. அவள் என்னிடம்
அண்ணா என்று அழைத்து தன் கையை நீட்டினால், பாக்கெட்டில் கையை விட்டு துலாவி , அலசி
ஆராய்ந்து ஒரு ஒத்த ரூபாய் நாணயத்தை நீட்டி விட்டு, நான் மாஸ்டரிடம் எனது டீயை
தொடர்ந்தேன். மாஸ்டர் டீ போடும் வரை , அங்கே தொங்க போட்டு இருந்த பத்திரிக்கைளில்
படம் பார்த்துக்கொண்டெ தட்டில் கொட்டியிருந்த ஒரு மசால் வடையை எடுத்து கடிச்சேன்.
மாஸ்டர் “டீ” என்று
சொன்னதும், அதை எடுத்து குடித்துக்கொண்டு வடையையும் கடித்துக்கொண்டெ படம் பார்த்து
கொண்டிருந்தேன். திடீர் என்று ஒரு சத்தம் , அது என்ன சத்தம் என்று தெரியவில்லை, ஆனால்
அந்த சத்தம் என் கவனத்தை அட்டை படங்களில் இருந்து திருப்பி அங்கே இருந்த மக்களிடம்
திருப்பியது.
அங்கே ஒரு சிறுவன் ,
தன் அன்னையின் மடியை முட்டி அழுது கொண்டு இருந்தான்
எதையோ கேட்டு அடம் பிடிப்பது போல் இருந்தது.
”அம்மா ப்ளீஸ் மா” என்று நான் என் அம்மாவிடும் கெஞ்சுவது போலவே அவனது கெஞ்சலும் இருந்ததால்
, நான் அவர்களை சிறிது நேரம் கவனித்தேன். சிறுவனின் கண்களில் நீர் முட்டி, எந்நேரமும்
சிந்த தயாராக இருந்தது. அவனது அன்னையோ , இவனது கெஞ்சலுக்கு ”மசியக்கூடாது” என்பது போல்
முகத்தை வைத்து இருந்தாள். அவனது அன்னையின் தோற்றத்தில் இருந்து அவர்கள் கீழ்தட்டு
நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களாக தெரிந்தார்கள்.
அந்த சிறுவனின் , விடா முயற்சியின்
பலனாக , அந்த அன்னை வேண்டா வெறுப்பாக தன் மகனிடம் ஒரு ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினால்,
அவனது மொத்த உலகமும் அந்த ஒற்றை நாணயத்தில் இருந்தது போல அவன் முகம் அவ்வளவு பிரகாசம்
அடைந்தது. அதை எடுத்து கொண்டு , அந்த சிறுவன், நேரே நான் இருந்த கடைக்கு வந்து ஒரு மசால் வடை வாங்கினான். இதற்குத்தான்
இந்த அழுகையா என்று நினைத்துக்கொண்டே , நான் ஒரு மெது வடையை தூக்கினேன். கடைக்காரர்
வடையை ஒரு பழைய நாளிதழில் மடித்து சிறுவனிடம் கொடுத்தார்.
இப்போது அந்த சிறுவன் வடையை வாங்கி
கொண்டு தன் தாயை நோக்கி நடந்தான். இப்போது என் கவனம் சற்றே தள்ளி நின்று கொண்டிருந்த
கந்தல் உடை சிறுமியிடம் சென்றது. அவள் கையினால் மூக்கில் வழிந்த திரவத்தினால் மீசை போட்டு
கொண்டெ இந்த சிறுவனின் தாய் அருகே நின்ற பெண்மணியிடம் கை ஏந்தினாள், அவள் “இல்லை” என்று மறுக்கவே அடுத்த ஆளிடம் போனாள்.
இதனிடையே, வடையை வாங்கிய சந்தோஷத்தில்
, தன் அம்மாவிடம் பிரித்து தரச் சொன்னான் சிறுவன் , அப்போது கந்தல் சிறுமி அவர்களிடம் சென்று
கையை நீட்டினால், அந்த தாய், தன் கையில் இருந்த வடையை தன் மகனிடம் கொடுத்து விட்டு
எதோ சொல்ல எத்தனிக்கும் போது, சிறுவன் தன்
கையில் இருந்த வடையை அந்த அழுக்கு சிறுமிக்கு கொடுத்துவிட்டு , “இதை சாப்பிடு” என்பது
போல் எதோ சொல்கிறான்.
என் வாயில் வைத்த வடை பாதியில்
நின்றது !!!.